×

குடிநீரை குடிக்க பொதுமக்கள் அச்சம் தாமிரபரணி தண்ணீர் நிறம் மாறியதன் மர்மம் என்ன?: நீரியல் நிபுணர்களின் ஆராய்ச்சி தொடர்கிறது

நெல்லை: தாமிரபரணி தண்ணீர் செந்நிறமாக காட்சியளிக்கும் நிலையில், நீரின் நிறம் மாறியதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. அணையை பார்வையிட்ட அதிகாரிகள் குழு காரணங்களை கேட்டறிந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆற்றுநீரை குடிக்க தயங்குகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி நதி திகழ்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பூங்குளம் தொடங்கி புன்னக்காயலில் கலக்கும் தாமிரபரணி நதியில் கழிவுகளும், குப்பைகளும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து   வருகின்றன. ஆனால் இவை ஆற்றின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே அதிகமாக காணப்படும். ஆற்றின் போக்கில் கழிவுநீரும், குப்பைகளும் மாறிவிடும். ஆனால் கடந்த ஒரு வாரமாக தாமிரபரணி ஆற்று தண்ணீர் பாபநாசம் தொடங்கி வைகுண்டம் வரை செந்நிறமாக காட்சியளிக்கிறது.

ஆற்றின் போக்கில் தண்ணீர் சில இடங்களில் கருப்பு நிறத்திலும், சில இடங்களில் செந்நிறமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் ஆற்றுக்கு குளிக்க செல்பவர்கள் உடலில் அரிப்பு எடுப்பதாக புகார் தெரிவித்து வருகின்றனர். வி.கே.புரம் தொடங்கி நெல்லை வரை வீட்டுக்கு வரும் ஆற்றுதண்ணீரும் நிறம் மாறியே காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரை குடிக்க தயக்கம் காட்டுகின்றனர். பொதுமக்கள் புகார் காரணமாக பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய துறையினர் பாபநாசம், சேர்வலாறு அணையை பார்வையிட்டு நீர் நிறம் மாறியதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.அம்பையில் குடிநீர் செந்நிறமாக காட்சியளிப்பதால், நகராட்சி அதிகாரிகள் குழுவும், நீரியல் நிபுணர்களும் பாபநாசம் கீழணைக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் குடிநீரை எடுத்து பரிசோதனை செய்தனர். தாமிரபரணி தண்ணீரில் எவ்வித வேதியியல் பொருட்களும் கலக்கப்படவில்லை என்பதை நீரியல் நிபுணர்கள் உறுதி செய்தனர்.

இருப்பினும் பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து குடிக்குமாறு நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் நிறம் மாற்றம் குறித்து சங்கர்நகர் சமூக ஆர்வலர் முத்துராமன் கூறுகையில், ‘‘தாமிரபரணி தண்ணீர் மாசு அடைந்து வருவது குறித்து பல வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இப்போது நீரின் நிறமாற்றம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமல்லாமல், பாபநாசம் தொடங்கி வைகுண்டம் வரை இருப்பதை காண முடிகிறது. நதியில் நீரின் நிறமாற்றம் என்பது கடந்த காலத்திலும் நிகழ்ந்துள்ளது. ஆனால் பில்டர் ஹவுசிற்கு அனுப்பிய பின்னர் தண்ணீர் இயற்கையான நிறத்திற்கு வந்துவிடும். செந்நிறம் இயல்பாக மறைந்துவிடும். ஆனால் தற்போது வடிக்கட்டிய தண்ணீரும் செந்நிறத்தில்தான் காட்சியளிக்கிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் மேம்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம். கீழணை தண்ணீர் திறந்து விடப்படுவதால், மண், சேறு காரணமாக நிறம் மாறி காட்சியளிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் இது சரியாகும் என்கின்றனர்.

இப்போது வரும் ஆற்று நீரை குடிப்பதா, வேண்டாமா என பொதுமக்கள் விழிக்கின்றனர். பலர் கேன் வாட்டரை வாங்கி குடிக்கின்றனர். எனவே நிறம் மாறியதற்கான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் முன் வர வேண்டும்’’ என்றார். இதுகுறித்து காரை யாறு அணை இ.ஈ. வெங்கடாசலம் கூறுகை யில், காரையாறு அணை யிலிருந்து குடிநீர், விவ சாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் அதிகளவில் தேங்கிய சேரும், சகதியும் நீர் பகிர்மான குழாய்களில் படிந்துள்ளது. தற்போது அணையி லிருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் அந்த சேறு கலந்து வரு கிறது. சில நாட்களில் இது முற்றிலும் சரியாகி விடும் என்றார்.

துர்நாற்றம் வீசுகிறது
நெல்லை, தச்சை மண்டல பகுதி களில் விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக இருப்பதுடன் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து இப்பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கோடை காலத்தையொட்டி இங்குள்ள 7 உறைகிணறுகள் தூர்வாரப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் இவ்வாறு நிறம் மாறிய தண்ணீரே விநியோகிக்கப்படுகிறது.

Tags : hydrologists ,public , public's fear , drinking water, mystery , color ,the copper-colored water,research by hydrologists continues
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்